பவுண்டரிகள் விளாசல் - அதிரடியாக சதத்தை நோக்கி செல்லும் ரிஷப் பண்ட்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களை குவித்திருந்தது. தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா மட்டும் நிலைத்து விளையாட மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
சுப்மன் கில், விராட் கோலி டக் அவுட் ஆகினர். புஜாரா 17, ரகானே 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மாவும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை கோட்டைவிட்டார். 121 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்டின் ஆட்டம் ஆறுதல் கொடுக்கும் வகையில் அமைந்தது. அஸ்வின் 13 ரன்களில் அவுட் ஆனாலும் வாஷிங்டன் சுந்தர் ரிஷப் பண்டிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடிய ரிஷப் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். 2021 தொடக்கம் முதலே அவர் கொல மாஸான பார்மில் உள்ளார். அரைசதம் அடித்ததற்கு பின் அவர் அதிரடியாக விளையாடி 75 ரன்களை விரைவாக எட்டினார். 81 ஓவர் முடிவில் இந்திய 6 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 84, வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
அனுபவ வீரர்கள் ஆட்டம் கண்ட போதும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் ரிஷப்.

