4 ஆண்டுகள் தடை: “லெவல் 1 புற்றுநோயின் வலி நிவாரணத்திற்காக அந்த மருந்தை சாப்பிட்டேன்” - டூட்டி சந்த்

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கும் வீராங்கனை டூட்டி சந்த், தனக்குப் புற்றுநோய் இருந்ததாகவும் அதற்கான மருந்துகளையே தான் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டூட்டி சந்த்
டூட்டி சந்த்PTI

100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனை படைத்த டூட்டி சந்த், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி மேற்கொண்டு அவர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில் ‘வேண்டுமென்றே தான் ஊக்கமருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார். எனவே தற்போது 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுகிறது’ என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், மாதிரி சேகரிப்பு காலத்தில் அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தும் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

டூட்டி சந்த்
டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை: விருதுகளும் தகுதி நீக்கம்!

இதுகுறித்து டூட்டி சந்த் அளித்துள்ள பேட்டியில், “இந்த வழக்கில் நான் தோல்வியடைந்து 4 ஆண்டுகள் தடை பெற்றது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க எனது வழக்கறிஞர் கடுமையாக முயன்றார். இதுவரை எந்தவொரு தடகள வீரருக்கும் இந்தியாவில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். இந்த வழக்கை மீண்டும் மேல்முறையீடு செய்வோம். கடினமாக உழைத்து நாட்டிற்காக விளையாடியுள்ளேன். வரவிருக்கும் காலங்களில் நான் கடினமாக உழைத்து இந்தியாவைப் பெருமைப்படுத்தும் அளவுக்கு எனக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க விளையாட்டு ஆணையம் மற்றும் அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். 2024 ஒலிம்பிற்குத் தகுதி பெற கடுமையாக முயற்சிப்பேன்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறுவதற்கான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றபோது, எனக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றபோதும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஒலிம்பிக்கிறகுப் பிறகு எனக்கு இடுப்பில் வலி அதிகமிருந்தது. இதையடுத்து அல்ட்ரா சவுண்ட் சோதனை பார்த்தேன். அதில் ஒன்றும் ரிசல்ட் தெரியவில்லை. அதன்பிறகு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்தேன். அதைப் பார்த்த மருத்துவர் சுதிப் சத்பதி (இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் மருத்துவர்) என்னிடம், ’உனக்கு லெவல் 1 கேன்சர் அறிகுறி இருக்கிறது. இதனால் நீ விளையாட்டை விட்டுவிட வேண்டும். இல்லையெனில், அது மோசமாகி விடும்’ என்றார்.

பின்னர், அதற்காக மருந்து சாப்பிட்டேன். வலி குறைந்துவிட்டது. குணமும் அடைந்துவிட்டேன். அப்போது வலி அதிகம் இல்லை என்பதால், மேற்கொண்டு வேறு எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யவில்லை. வலி நிவாரணத்திற்காக நான் அந்த மருந்தை 15-20 நாட்கள் சாப்பிட்டேன். அது ஊக்க மருந்து என்பது எனக்குத் தெரியாது.

பிறகு, இந்த மாதிரியை நாடாவிடம் (தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை) கொடுத்தபோது டூப் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதுதான் தடைக்கான காரணம். இதே மருத்துவ அறிக்கையை வேறொரு நிபுணருக்கும் அனுப்பினேன். அவர், ’இதுபோல் இன்னும் சிலருக்கும் நடந்துள்ளது’ எனக் கூறினார்” என் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்காக வலி நிவாரணி எடுத்ததை ஊக்கமருந்து பயன்படுத்தியது எனக்கூறி சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை தடை விதித்திருப்பது, இணையத்திலும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com