"கவலைப்படாம ஆடு மாமா" : ஆடுகளத்தில் விஹாரியுடன் தமிழில் பேசிய அஷ்வின்!
சிட்னி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை சமன் செய்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என இதை சொல்லலாம். இருப்பினும் இதில் ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வினின் பங்கு கொஞ்சம் அதிகம். இருவரும் மாரத்தான் ஓட்டம் போல நீண்ட நெடிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அவர்களது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை நெயில் பைட்டிங் மொமெண்ட்டிற்கு கொண்டு சென்றது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை அசராமல் எதிர்கொண்டனர் இருவரும். அதிலும் அஷ்வின் விஹாரியுடன் பேசிய படி அவருக்கும் நம்பிக்கை கொடுத்து, அதை தனக்குமான நம்பிக்கையாக எடுத்துக் கொண்டார்.
குறிப்பாக ஆட்டத்தின் போது அஷ்வின் விஹாரியுடன் தமிழில் பேசியுள்ளார். “கவலைப்படாம ஆடு மாமா. ஆடு. பால் வெளிய தான் போகும். பத்து பத்து பாலா போவோம். நாப்பது பால் தான் மொத்தம்” என அஷ்வின் தமிழில் சொல்லியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது இப்போது வைரலாக பகிரப்பட்டும் வருகிறது.