தடுமாறிய அணியை அதிரடியால் மீட்ட ஹர்திக் பாண்ட்யா - வெற்றிபெறுமா இந்தியா?
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய கிரிக்கெட் அணி அசத்தினாலும் இந்த அனைத்திலும் அசத்துகிற வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டருக்கான தேடல் தொடர்ச்சியாக நீண்டு கொண்டே இருந்தது. அந்த தேடலுக்கு தனது வருகையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அதிரடி பேட்டிங்கிற்காக அறியப்படுபவர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பாண்ட்யா முதல் ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் 50 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச அளவில் 50 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் கடந்த ஆல் ரவுண்டர்களின் பட்டியலில் 62 வது வீரராக இணைந்துள்ளார் பாண்ட்யா. இந்திய அளவில் 12 வது வீரராக இந்த இலக்கை எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தன்னுடைய மிரட்டல் அடி மூலம் இன்று மிரள வைத்துள்ளார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், ஷிகார் தவானுடன் ஜோடி சேர்ந்து சரிந்த இந்திய அணியை தன்னுடைய அதிரடியால் மீட்டுள்ளார். 6 ஆவது வீரராக களமிறங்கிய போதும் ஷிகர் தவானுக்கு முன்பாகவே அவர் அரைசதம் அடித்து விட்டார்.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. 375 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது. 101 ரன்களுக்குள் 4 விக்கெட் சரிந்தன. ஹர்திக் பாண்ட்யா நிதானமாகவும் அதே சமயத்தில் லாவகமான பந்துகளை சிக்ஸர் பவுண்டரிகளுக்கு விளாசியும் ரன்களை குவித்தார். இந்திய அணி 34.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 86 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஜம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 81 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா அடுத்ததாக களமிறங்கியுள்ளார்.