கடைசி வரை போராடிய ஆஸ்திரேலியா - இந்திய அணி அசத்தல் வெற்றி

கடைசி வரை போராடிய ஆஸ்திரேலியா - இந்திய அணி அசத்தல் வெற்றி
கடைசி வரை போராடிய ஆஸ்திரேலியா - இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், ஷமி, சஹால் மற்றும் சைனிக்கு மாற்றாக சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். 

தவானும் - சுப்மன் கில்லும் இந்தியாவுக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். கோலி 63 ரன்களை விளாசினார். பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது இந்தியா. 

தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்காக கேப்டன் ஆரோன் ஃபின்சும், மார்னஸ் லபுஷேனும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இந்தியாவுக்காக பும்ராவும், நடராஜனும் பந்து வீசினர். லபுஷேன் நடராஜன் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரின் முதல் பந்தில் போல்டாகி விக்கெட்டை இழந்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜனின் முதல் விக்கெட்டாகவும் அமைந்தது. 

தொடர்ந்து ஸ்மித், ஹென்ரிக்ஸ், ஃபின்ச், கேமரூன் க்ரீன் மாதிரியான வீரர்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மேக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் கேரியை ரன் அவுட் செய்து வெளியேற்றினார் கோலி. இருப்பினும்  மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அது ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவின் பக்கமாக திருப்பி இருந்தது. ஆனால் பும்ரா மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அது  ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

தொடர்ந்து 47 மற்றும் 48 வது ஓவர்களில் அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தினர் ஷர்துலும், நடராஜனும். 49.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com