தோல்வி பயத்தை காட்டிய சாம் கரன்! 'த்ரில்' வெற்றிப் பெற்ற இந்தியா
இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் சாம் கரனின் இறுதி நேர அதிரடி ஆட்டத்தையும் மீறி கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 48.2 ஓவர் முடிவில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் தவான், பண்ட், ஹர்திக் பாண்ட்யா மாதிரியான பேட்ஸ்மேன்கள் அசத்தலாக ஆடி இருந்தனர். மூவரும் அரை சதம் கடந்து அவுட்டாகினர்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே ஜேசன் ராயை அவுட்டாக்கினார் புவனேஷ்வர் குமார். இதனையடுத்து கடந்தப் போட்டிகளில் அதிரடி காட்டிய பேர்ஸ்டோவையும் 3ஆவது ஓவரில் வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். கடந்தப் போட்டியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட பென் ஸ்டோக்ஸை நடராஜன் அவுட்டாக்கினார்.
இதனையடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லரை ஆபந்தபாந்தவன் ஷர்துல் தாக்குர் வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து விரைவில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டேவிட் மலானும் - லிவிங்ஸ்டோனும் ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இதில் டேவிட் மலான் அரைசதமடித்து ஆட்டமிழந்தார், பின்பு லிவிங்ஸ்டோனும் ஆட்டமிழக்க இங்கிலாந்து தடுமாறியது.
ஆனால், சாம் கரனும் - அடில் ரஷீதும் இந்திய பவுலர்களை சிதறடித்து விளையாடினர். ஆனால் அடில் ரஷீத் ஆட்டமிழக்க இங்கிலாந்து தொடர்ந்து வெற்றிக்காக போராடியது. அதிலும் சாம் கரன் ஏறக்குறைய இந்தியாவின் எளிதான வெற்றியை கிட்டத்தட்ட தட்டி பறித்தார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கடைசி ஓவரை அற்புதமாக வீசிய நடராஜனின் வேகப்பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்தால் இலக்கை எட்ட முடியவில்லை.
இறுதியாக 50 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அற்புதமாக விளையாடிய இங்கிலாந்தின் இளம் ஆல் ரவுண்டர் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டை எடுத்தனர்.