நின்று வெளுத்த தவான் ! மண்ணைக் கவ்வியது நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல்ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நேப்பியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக கேன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ரோகிஷ் ஷர்மா வெறும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குப்திலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையத்து ஷிகர் தவானுடன் விராட் கோலி கைகோர்த்தார். 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 44 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் பேட்ஸ்மேனின் கண்கள் கூசும் அளவிற்கு சூரிய வெளிச்சம் விழுந்தது. அதாவது நேப்பியரில் உள்ள கிரிக்கெட் மைதனாம் கிழக்கு- மேற்கு திசையில் இருப்பதால் சூரியன் வெளிச்சம் நேரடியாக பேட்ஸ்மேன்கள் கண்களை வந்து தாக்கும் நிலை உருவானது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 49 ஓவர்களாக குறைக்கப்பட்டதோடு, இலக்கும் 156 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து விராட் கோலி 45 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேசமயம் மறுமுனையில் ஷிகர் தவான் நிதானமாக ஆடி வந்தார். பின்னர் அம்பத்தி ராயுடு ஷிகர் தவனாடு கை கோர்த்தார். இதனையடுத்து இந்திய அணிய 34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 75 ரன்களுடனும் (6 பவுண்டரிகள்), அம்பத்தி ராயுடு 13 ரன்களுடனும் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்றனர்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுவேந்திர சாஹல் என இந்திய தரப்பில் பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி நியூசிலாந்து விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர். அத்துடன் ரன்களையும் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இதுவே இந்திய அணி வெற்றிக்கு முக்கியதொரு காரணமாக அமைந்தது. மறுபுறம் நியூசிலாந்து வீரர்களும் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்பட்டனர். இதுவும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதனால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியில் முகமது ஷமி ஒரு சாதனையை படைத்தார். அதாவது குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமை ஷமிக்கு கிடைத்தது. தனது 56-வது போட்டியில் ஷமி இந்த சாதனையை செய்துள்ளர். முன்னதாக 59 போட்டிகளில் இர்பான் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.