பத்து வருடத்துக்கு முன், டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள் இன்று. இதையடுத்து #World T20 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த 2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இந்த போட்டித் தொடரில்தான் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் தொடர்ந்து ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்தார். ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதே நாளான 2007, செப்டம்பர் 24-ம் தேதி மோதின. ரசிகர்களின் இதயத்தை படபடக்க வைத்த இந்தப் போட்டியில், இந்தியா திரில் வெற்றி பெற்றது. தோனியின் தலைமையில் இந்த வெற்றியை பெற்று இன்றோடு பத்துவருடம் ஆகிவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #World T20 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களும் மூன்னாள் வீரர்களும் மலரும் நினைவுகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.