இன்னிங்ஸ் மற்றும்  272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீர்ராக களமிறங்கிய பிருத்வி ஷா 134 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராத் கோலி 139 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), பாவெல் (1 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருந்தது. இன்றைய 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தது. இறுதியாக 48 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் பெற்றது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. கியிரான் பாவெல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 93 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். போவெலுக்கு அடுத்து களம் இறங்கியவர்கள் யாரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை தழுவியது. அதன்படி 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com