இந்திய அணி அபார வெற்றி - ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி, பாண்ட்யா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பாண்ட்யா 65 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், தோனி 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். கேதர் ஜாதவ்(40), புவனேஸ்குமார்(32) ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கவுல்டர் நைல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து தொடர்ச்சியாக மழை குறுக்கிட்டதால் போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால் இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், 35 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்துவிட்டது. கார்ட் ரைட்(1), கேப்டன் ஸ்மித்(1), ஹெட்(5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வார்னர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியால் மிரட்டினார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமான அவர் விளாசியதால் ஆஸ்திரேலியா அணியின் ரன் விகிதம் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் விக்கெட்டை அடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியானதாக கருதப்பட்டது. ஆனால், கடைசில் பாஃக்னர் இறுதிவரை நின்று சீராக ரன்களை சேர்த்தார். இருப்பினும் மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.
நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.