கிரிக்கெட்டை கொண்டாடும் வெஸ்ட் இண்டீஸில் கூட்டமே இல்லாமல் நடந்த போட்டியால் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி, 38.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியின் போது மைதானம் வெறிச்சோடி இருந்ததால் இரு நாட்டு வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
வழக்கமாக கிரிக்கெட்டை கொண்டாடும் நாடு வெஸ்ட் இண்டீஸ். அங்கு சின்ன போட்டி நடந்தாலும் கேலரி பொங்க வந்து ரசிப்பார்கள் ரசிகர்கள். ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போது நார்த் சவுண்ட் மைதானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இருந்து போட்டியைப் பார்த்தனர். அதிலும் பாதிபேர் இந்திய ரசிகர்களே!
ஏன் இப்படி என்று விசாரித்தால், ’வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இருக்கும் வாய்க்கா தகராறு (சம்பள பஞ்சாயத்து) முடிந்தபாடில்லை. இதனால் நட்சத்திர வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை. புது டீமை உருவாக்கி விளையாட வைத்துள்ளனர். இதன் காரணமாக கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிட்டது. அதனால்தான் மைதானத்துக்கு யாரும் வரவில்லை’ என்கின்றனர்.

