வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளியது இந்தியா - ரோகித் சிக்ஸர் மழை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடியது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இந்திய அணி தொடரை வெல்லுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று டிரா செய்யுமா என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினார். அந்த அணி 2 ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்தது. பவெல்(16), சாமுவேல்ஸ்(24), ஹோல்டர்(25) தவிர மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹோப் டக் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். அஹமத், பும்ரா தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர். இதனையடுத்து, 105 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தை கையிலெடுத்தனர். முதலில் விராட் பவுண்டரிகளாக அடிக்க ரோகித் நிதானமாக விளையாடினார். பின்னர், விராட் நிதானமாக விளையாட ரோகித் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினார்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய 52 ரன் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்த 4.5 ஓவர்களில் 53 ரன் எடுத்தது. 14.5 ஓவரில் 105 ரன் எடுத்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 63(56), விராட் கோலி 33(29) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோகித் 4 சிக்ஸர்களை விளாசினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஜடேஜா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6வது ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்திய அணி 211 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தப் போட்டியில் வென்றுள்ளது.