மே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பிராத்வொயிட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆக, அறிமுக வீரர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. இவர் நிதானமாக விளையாட பிரித்வி ஷா ஒருநாள் போட்டியை போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இந்திய அணி 19.5 ஓவரில் 100 ரன்களை எட்டியது. அதிரடியாக விளையாடிய ஷா 99 பந்துகளில் சதம் விளாசி தள்ளினார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி 40.3 ஓவரில் 200 ரன்களை எட்ட, நன்றாக விளையாடிய புஜாரா 86(130) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாராவை அடுத்து, பிரித்வி ஷா 154 பந்தில் 134 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனையடுத்து, கேப்டன் விராட் கோலியும், ரகானேவும் ஆட்டத்தை கையிலெடுத்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. 41 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் களமிறங்கினார். இறங்கிய வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 72(137), ரிஷப் பந்த் 17(21) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இளம் வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் விளாச, அனுபவம் மிக்க புஜாரா, விராட் கோலி அரைசதம் அடித்து, மேற்கிந்திய தீவுகள் வீரர்களை மிரட்டினர். இந்திய அணி நிச்சயம் முதல் இன்னிங்சில் 500 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.