தோனியை பின்னுக்கு தள்ளி சாதனைப் படைக்க தயாராகும் விராட் கோலி
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைக்கவுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அப்போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை தோனியுடன், கோலி பகிர்ந்து கொண்டார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார் தோனி. 47 போட்டிகளிலேயே 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் கோலி. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் இருக்கிறார் ’தாதா’ கங்குலி.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் தோனியை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையை விராட் கோலி படைப்பார்.