இன்று, முதல் டி20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி இன்று பங்கேற்கிறது.
இந்தியா கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் 2 டி-20 போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி இன்று நடக்கிறது. உலகக் கோப்பைக்கு பிறகு விராத் கோலி தலைமை யில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது.
கேப்டன் கோலிக்கும் துணை கேப்டன் ரோகித்தும் பிரச்னை என்று கூறப்படும் நிலையில் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியில், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா ஆகிய இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். தோனி இல்லாத நிலையில், ரிஷப் பன்டுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித், ஷிகர் தவான், விராத் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் வழக்கம் போல முதல் நான்கு இடங்களில் களமிறங்குகின்றனர்.
பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில், அதிரடி வீரர்கள் பொல்லார்ட், சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் திரும்பி உள்ளனர். இதற்கிடையே, ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், காயம் காரணமாக, இந்தியாவுடனான முதல் 2 டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜாசன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.