மருத்துவமனையிலிருந்து இஷான் கிஷன் 'டிஸ்சார்ஜ்': இன்றையப் போட்டியில் விளையாடுவாரா?
இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். போட்டியின்போது 4-வது ஓவரில் அவரது தலையில் பந்து தாக்கியது. லகீரு குமாரா வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றினார். இந்திய மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து தலையில் பட்ட காயத்துக்காக இஷான் கிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இஷான் கிஷன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த காயம் காரணமாக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுடன் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கலாம். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் எனத் தெரிகிறது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற மைதானமான தரம்சாலாவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் விளையாடிய மறுநாளே ஓய்வின்றி களம் இறங்க வேண்டி இருப்பதாலும், தொடரை ஏற்கனவே வென்று விட்டதாலும் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக ரோகித் படைத்த மிரட்டலான சாதனை! என்ன தெரியுமா

