இலங்கை வீரர்கள் அசத்தல்: டிரா ஆனது 3-வது டெஸ்ட்
டெல்லியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 410 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வந்தது.
நேற்று ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 5-நாள் ஆட்டத்தை இலங்கை தொடர்ந்து விளையாடியது. மேத்யூஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டி சில்வா 119 ரன்கள் எடுத்திருந்த போது ரிடையர் ஹர்ட் ஆகி வெளியேறினார். சண்டிமால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏ.ஆர்.எஸ் சில்வா மற்றும் டிக்வில்லா இருவரும் நிதானமாக விளையாடி இலங்கை அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டனர்.
இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியை டிரா செய்து கொள்வதாக இரு அணிகளின் கேப்டன்களும் அறிவித்தனர். சில்வா 74, டிக்வில்லா 44 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
போட்டி டிரா ஆன நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், 610 குவித்த விராட் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்றே 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இலங்கை அணி தோல்வி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் இலங்கை தரப்பில் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தது. இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தனர்.