இந்தியா அபார பந்துவீச்சு: வெற்றிக்கு முயற்சி செய்யாமலேயே தோற்ற இலங்கை!
லக்னோவில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். இதில் இஷான் கிஷன் 89, ஸ்ரேயாஸ் ஐயர் 58 மற்றும் ரோகித் சர்மா 44 ரன்களை சேர்த்து அபாரமாக விளையாடினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை சேர்த்து. இதனையடுத்து வெற்றி இலக்கான 200 ரன்களை சேர்க்க இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் துவங்கிய முதல் பந்திலேயே இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே பதும் நிசாங்கா டக் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கமில் மிஷாரா, ஜனில் லியாநாகே, தினேஷ் சந்திமால், தசுன் சனாகா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கையின் ஒரே ஆறுதலாக சரித் அசலங்கா பொறுமையாக விளையாடினார்.
அவர் மட்டும் 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் அவருக்கு துணையாக மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாட தவறினர். சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, ஆந்த அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு, 137 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்முலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் டி20 தொடரில் 1 - 0 என்று முன்னிலை வகிக்கிறது.