தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து டி காக் விலகியுள்ளார். பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது குயின்டான் டி காக்கின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்பதால், குயின்டான் டி காக் விலகியுள்ளார்.
ஏற்கனவே அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் போட்டியில் இல்லாத நிலையில் தற்போது டி காக்கும் இல்லாதது அந்த அணிக்கு சிக்கலை அதிகரித்துள்ளது. டிகாக் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 34, 20 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் மற்றவீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அவர் அடித்த 20 ரன்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. கீப்பரும் பேட்ஸ்மேனுமான ஹென்றிச் குலாசென் டி காக்கிற்கு பதிலாக அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.