உலகக் கோப்பை வரலாறு ! வெற்றிகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென் ஆப்பிரிக்கா
உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி இன்று இங்கிலாந்தின் சௌத்தாம்டன் நகரில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்கா 3 முறையும் இந்தியா ஒரு முறையும் வென்றுள்ளது. அந்தப் போட்டிகளின் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.
1992 உலகக் கோப்பை:
உலகக் கோப்பையின் கடைசி ரவுண்ட் ராபின் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதியது. ஆட்டத்திற்கு முன் மழை குறுக்கிட்டதால் போட்டி 30 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி அசாரூதின் மற்றும் கபில் தேவ்வின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டு இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆண்ட்ரூ ஹட்சன் மற்றும் பீட்டர் கிறிஸ்டீன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 128 ரன்கள் சேர்த்தனர்.
1999 உலகக் கோப்பை:
உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்திய மற்றும் தென் ஆப்பிர்க்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் அசாருதின் பேட்டிங்கை தேர்வு செய்தார். சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் திராவிட் தென் ஆப்பிர்க்கா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இருவரும் 2வது விக்கெட்டிற்கு 130 ரன்கள் சேர்த்தனர். சவுரவ் கங்குலி 3 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். எனினும் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். எனினும் காலிஸ் மற்றும் பவுச்சர் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். காலிஸ் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜாண்டி ரோட்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
2011 உலகக் கோப்பை:
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் சிறப்பாக விளையாடி வந்தது. இதனால் குரூப் ‘பி’யில் முதலிடம் இந்திய பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாக்பூரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை அடித்து விளாசினர். ஆட்டத்தின் முதல் பந்தை சேவாக் பவுண்டரி அடித்து ஆரம்பித்தார். அதன்பிறகு சச்சின் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாச தொடங்கினார். முதல் 10 ஓவரில் இந்திய அணி 87 ரன்கள் சேர்த்தது. விரேந்திர சேவாக் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுரம் சச்சின் டெண்டுல்கர் தனது 99வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். எனினும் மறுமுனையில் சீரான இடைவேளையில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் இந்திய அணி 267 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் அடுத்த 9 விக்கெட்டுகளை 29 ரன்களில் இழந்து 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் மற்றும் டூபிளசிஸ் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது. எனினும் இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டூபிளசிஸ் மற்றும் ராபின் பீட்டர்சன் நெஹரா பந்துவீச்சை சிதறடித்து தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்ற ஒரே போட்டி இதுவேயாகும்.
2015 உலகக் கோப்பை:
மெல்போர்னில் இரண்டு பலம் பொருந்திய அணிகளான இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் கோலி 127 ரன்கள் சேர்த்தனர். கோலி ஆட்டமிழந்த பிறகும் ஷிகார் தவான் தனது அதிரடியை தொடர்ந்தார். இவர் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் ரஹானே மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் டூபிளசிஸ்(55) மற்றும் டிவில்லியர்ஸ்(30) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக சொபிக்காத நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 177 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக இந்தியா தோற்கடித்தது.
இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்று பெற்று உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரசிகர்கள் எண்ணம் நிறைவேறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.