இந்தியாவுக்கு எதிராக நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகளும் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகள், 3டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 5-ல் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் ஓராண்டுகளாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் விளையாடவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக ஸ்டெயின் தயாராகி வந்தார். முதன்முறையாக ஜிம்பாப்வேயிற்கு எதிரான நான்கு நாள் பகல்-இரவு டெஸ்டில் களம் இறங்கினார். அப்போது சில ஓவர்கள் வீசிய ஸ்டெயின் வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டார்.
இதனால் ஸ்டெயின் உடல் தகுதி மீண்டும் கேள்விக்குள்ளானது. இதுகுறித்து பயிற்சியாளர் கிப்சன் கூறுகையில் டேல் ஸ்டெயின் உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆனால் மேற்கொண்டு ஒருவாரம் ஓய்வு அளிக்கலாம் என்று பார்க்கிறோம் என்றார். இருப்பினும் போட்டி நடைபெறும் நாளில் தான் ஸ்டெயின் விளையாடுவது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.