இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை, விராட் கோலி நெருங்கி வருகிறார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் இதுவரை 393 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 75 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 5 பேரில் கோலி இடம் பிடித்துள்ளார். முன்னதாக 5-ம் இடத்தில் 9378 ரன்களுடன் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினை கோலி பின்னுக்கு தள்ளினார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து 11,221 ரன்களுடன் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி 2ம் இடத்தில் இருக்கிறார். ராகுல் டிராவிட்(10,768), தோனி(9,780) ரன்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். விராட் கோலி தற்போது 9,423 ரன்களுடன் 5-ம் இடத்தை பிடித்துள்ளார்.
விராட் கோலிக்கும், தோனிக்கும் இடையே வெறும் சுமார் 300 ரன்கள் தான் வித்தியாசம் உள்ளது. விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருவதால் விரைவில் தோனியை முந்திவிடுவார் என்று தெரிகிறது. அதேபோல், 10,000 ரன்களை எட்ட தோனிக்கு 220 ரன்களும், விராட் கோலிக்கு 577 ரன்களும் தேவை. தோனியை விட கோலிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்ட போதும், தற்போது கோலி விளையாடும் ஆட்டத்தைப் பார்த்தால் தோனிக்கு முன்பாக 10 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார் என்று தெரிகிறது.