12 ரன்னில் 3 விக்கெட் இழந்த தென் ஆப்ரிக்கா: சரிவில் இருந்து மீட்டார் டிவில்லியர்ஸ்
தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகள் இழந்த தென் ஆப்ரிக்கா அணியை ஏபி டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் சாய்த்தார். எல்கர்(0), மர்க்ரம்(5), ஹசிம் அம்லா(3) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூபிளிசிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். டூபிளிசிஸ் நிதாமனமாக விளையாட டிவில்லியர்ஸ் பவுண்டரிகளாக விளாசினார்.
இருவரும் விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டனர். 55 பந்துகளில் டிவில்லியர்ஸ் அரைசதம் விளாசினார். இதனால் 25.1 ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 98 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதிரடியாக விளையாடிய ட்வில்லியர்ஸ் 65 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது பும்ராவுக்கு முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும். அவரை தொடர்ந்து டுபிளிசிஸ் 62 ரன்னில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ப்ரிக்கா அணி 37 ஓவர்களில் 150 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.