ரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டி காக் 52, பவுமா 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 150 என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் 40 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி தொடர்ந்து அசத்தினார். ஆனால், ரிஷப் பண்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 எடுத்தது. விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டி துவங்குதற்கு முன்பு ரோகித் சர்மா 2,422, விராட் கோலி 2,369 ரன்களுடன் இருந்தனர். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அவர் வசம் 2,434 ரன்கள் உள்ளது. ஆனால், விராட் கோலி 72 ரன்கள் விளாசியதால் அவர் மொத்தம் 2,441 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவை விட அதிக ரன்கள் குவித்துள்ளார்.