பாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்புவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் அணி லாக்கரில் வைத்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஸ்பெஷல் ஆட்டத்தை பாகிஸ்தான் விளையாடும் எனக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இவ்வாறு பாகிஸ்தான் சவால் விடுவது ஒன்றும் புதிதல்ல. பலமுறை இதுபோன்ற சவால்களை இந்தியா ஊதித்தள்ளியுள்ளது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மொத்தம் 6 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் அனைத்து போட்டிகளையுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் வீரர்கள் அல்லது முன்னாள் வீரர்கள் சாவல் விட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இதேபோன்று டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதிலும் அனைத்து போட்டிகளையுமே வென்று இந்தியா பல்புகளை பாகிஸ்தனுக்கு பரிசாக கொடுத்துள்ளது.
இதில் ஆகச் சிறந்த பல்பு எதுவென்றால் 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. அதே தொடரில் இந்தியா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டியளித்தார் " அப்போது இந்தியாவுடனான போட்டி எங்களுக்கு பயிற்சி ஆட்டம்போலதான்" என தெனாவட்டாக தெரிவித்தார். ஆனால், அசாருதின் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்து தோற்கடித்தது.
இதனால் இந்தியா-பாகிஸ்தானின் உலகக் கோப்பை பகை என்பது தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமின்றி எல்லை ரீதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை, ரசிகர்கள் உணர்ச்சிப் பூர்வமாக பார்க்கின்றனர். இதனால் மற்ற அணிகளிடம் தோற்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தானிடம் தோற்றுவிடக்கூடாது என எண்ணத்துடன் இந்திய அணி விளையாடி வருகிறது. அதேசமயம் ஒரு முறையாவது உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றுவிட வேண்டும் என பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதனால் இரு அணிகளும் மோதும் போட்டிகள் அனல் பறக்கின்றன. அதேசமயம் சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்கள் அனல் பறக்கின்றன.
அண்மையில் கூட பாகிஸ்தான் ஊடகம் ஒன்று கோப்பை சொந்த நாட்டிற்கு கொண்டு வாருங்கள் என ஒரு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றம் நிலவி வருவதால், இரு அணிகளும் தனிப்பட்ட வகையில் கிரிக்கெட் தொடர் விளையாடுவதில்லை. எனவே உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் திரோபி போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றன. இதனால் இரு அணிகளும் எதிரெதிர் அணியின் விளையாட்டை கணிப்பது கடினமாக இருக்கும்.