நிலை தடுமாறியதால் சோகம் - ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட பாண்ட்யா
இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, பந்துவீசும் போது நிலைதடுமாறி விழுந்ததால் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டார்.
ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை வென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
இந்திய அணியும் அடுத்த விக்கெட்டை சாய்ப்பதற்காக பல யுக்திகளை கையாண்டது. ஆனால் விக்கெட் விழவில்லை. இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அது இந்திய தரப்பில் இருந்து வீசப்படும் 18வது ஓவர். அத்துடன் ஹர்திக் பாண்ட்யா வீசும் 5வது ஓவர். பந்துவீச வேகமாக ஓடி வந்த பாண்ட்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டது. சக வீரர்கள் ஓடிவந்து அவரை பரிசோதித்தனர். பின்னர் மருத்துவக்குழு வந்து பரிசோதித்துவிட்டு, பாண்ட்யாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்றது. அவர் விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் மேலும் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. பாபர் 47 ரன்களில் அரைசதம் அடிக்காமல் அவுட் ஆகினார். 26 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.