மழை குறுக்கிட்டதால் இந்தியா - நியூசிலாந்து போட்டி நிறுத்தம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மழை குறுக்கிட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் மான்செஸ்டரில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குப்தில் பும்ரா பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் - வில்லியம்சன் ஜோடி நிதானமாக விளையாடியது. சற்று நேரம் தாக்குப்பிடித்த நிக்கோல்ஸ் 28 (51) ரன்னில் ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
பின்னர், வில்லியம்சனுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட் சரிவை தடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் இந்திய வீரர்களால் பிரிக்க முடியவில்லை. கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர், 67(95) ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
வில்லியம்சனை அடுத்து வந்த நீஷம் 12, டி கிராண்தோம் 16 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும், டெய்லர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 46.1 ஓவரில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெய்லர் 67 ரன்களுடனும், லாதம் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 23 பந்துகளே மீதமுள்ளன.