இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி, தவான், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். சுழல் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோரும் ஃபார்மில் உள்ளதால் இந்திய அணி தெம்பில் உள்ளது.
நியூசிலாந்து அணியில், ராஸ் டெய்லர், மார்ட்டின் குப்தில், கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், சவுதி, மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோர் சிறந்த நிலையில் உள்ளதால் போட்டி சவாலானதாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்திய மண்ணில், நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டித் தொடரை இதுவரை வென்றதில்லை. அதனால் இந்த தொடரை வென்று, வரலாற்றை மாற்றும் முனைப்பில் அந்த அணி ஆக்ரோஷமாக களமிறங்கும் எனத் தெரிகிறது.
பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.