தொடரை வெல்லப் போவது யார்? - கடைசி டி20 போட்டியில் இன்று இந்தியா - நியூசிலாந்து மோதல்

தொடரை வெல்லப் போவது யார்? - கடைசி டி20 போட்டியில் இன்று இந்தியா - நியூசிலாந்து மோதல்
தொடரை வெல்லப் போவது யார்? - கடைசி டி20 போட்டியில் இன்று இந்தியா - நியூசிலாந்து மோதல்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும்  கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில்  நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.

இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி ஆகிய மூவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இருப்பினும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அதேவேளையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல என்பதையும் நியூசிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பார்கள்.  

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 55 இரு தரப்பு தொடர்களில் இந்தியா 47 தொடர்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2019ல் ஆஸ்திரேலியாவும், 2015ல் தென் ஆப்ரிக்காவும் மட்டுமே இந்திய அணியை இங்கு வீழ்த்தியுள்ளன. 2012இல் இந்திய மண்ணில் டி20 தொடரை வென்ற நியூசிலாந்து அணி அதன் பிறகு இங்கு எந்தவித போட்டி தொடரையும் கைப்பற்றியது கிடையாது. இதனால் தொடரை வென்று அந்த சோக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நியூசிலாந்து அணி முயற்சி செய்யும். அதேசமயம் ஹர்திக் தலைமையிலான இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com