15 ரன்னில் 5 விக்கெட்.. ஆனால் 108 ரன்னில்தான் ஆல்-அவுட்! தாக்குப்பிடித்த 3 நியூ. வீரர்கள்!

15 ரன்னில் 5 விக்கெட்.. ஆனால் 108 ரன்னில்தான் ஆல்-அவுட்! தாக்குப்பிடித்த 3 நியூ. வீரர்கள்!
15 ரன்னில் 5 விக்கெட்.. ஆனால் 108 ரன்னில்தான் ஆல்-அவுட்! தாக்குப்பிடித்த 3 நியூ. வீரர்கள்!

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி, 6 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி ஜொலித்து வந்தாலும் பந்துவீச்சில் விமர்சனங்களை எதிர்கொண்டே தான் வருகிறார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் இந்திய அணி 349 ரன்கள் குவித்த போதும், பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் 12 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. இப்படி பல போட்டிகளில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்து விக்கெட் வீழ்த்த முடியாமல் போட்டி இறுதிவரை சென்று வெற்றி பெற்றும் மகிழ்ச்சி இல்லாத அளவிற்கு சென்று விடுகிறது.

இத்தகைய சூழலில் தான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 108 ரன்களில் ஆல் அவுட் செய்துள்ளது இந்திய அணி. என்னடா 108 ரன்களில் ஆல் அவுட் செய்துவிட்டார்களே என ஜோராக பாராட்டலாம் என நினைத்தால், அதுதான் முடியவில்லை. அதிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்பூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய முகமது ஷமி அந்த ஓவரின் 5வது பந்தில் பில் ஆலென் விக்கெட்டை சாய்த்தார். ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே நியூசிலாந்து அணி விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் விக்கெட் விழுந்ததுதான் தாமதம், கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் 5 விக்கெட் சாய்ந்துவிட்டது.

அதாவது, ஆட்டத்தின் 6ஆவது ஓவரில் ஹென்ரி நிக்கோலஸ் விக்கெட்டை முகமது சிராஜ் சாய்த்தார். அடுத்த ஓவரில் டேர்லைல் மிட்செல் விக்கெட்டை முகமது ஷமி எடுத்தார். அதேபோல், 10 ஆவது ஓவரில் டெவேன் கான்வே விக்கெட்டை ஹர்திக் பாண்டியாவும், 11வது ஓவரில் டாம் லாதம் விக்கெட்டை ஷர்துல் தாக்கூரும் வீழ்த்தினர். 10.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இப்படி இருக்கையில் நிச்சயம் 50 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தி விடலாம் என்றே பலரும் கருதி இருப்பார்கள். ஆனால், டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர்.

கடந்த போட்டியில் சதம் விளாசி இந்திய அணி திணறடித்த மைக்கேல் பிரேஸ்வெல்லும், க்ளென் பிலிப்ஸூம் ஜோடி சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்த ஜோடி கிட்டதட்ட 31 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. பிரேஸ்வெல் 22 (30) ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் வீழ்ந்தார். சரி பிரேஸ்வெல் வீழ்ந்துவிட்டார் என நினைத்தால் பிலிப்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் மிட்செல் சாண்ட்னெர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கிட்டதட்ட 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

30.1 ஆவது ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. சாண்ட்னர் 27(39) ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தரிடம் வீழ்ந்தார் பிலிப்ஸ். அவர் 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த இரண்டு விக்கெட்டுகள் எளிதில் வீழ்ந்தது. நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 6 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்தார். அதில் ஒரு மெய்டன் ஓவர். ஹர்திக் பாண்டியா இன்று மூன்று மெயிண்டன் ஓவர்களை வீசினார். இதனையடுத்து 109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.



என்னதான் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை இன்றைய போட்டியில் செலுத்தி இருந்தாலும் அந்த பழைய சிக்கல் மீண்டும் தொடர்கிறது. அதாவது தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இறுதியில் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களை சாய்க்க சற்றே தடுமாறுகின்றனர். அது இன்றையப் போட்டியிலும் தொடர் கதையாக நீண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com