உலகக் கோப்பையில் 16 ஆண்டுகளுக்கு பின்பு மோதும் இந்தியா - நியூசிலாந்து !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டங்களில் பலம் வாய்ந்த தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வென்றுள்ளது. அதேபோல நியூசிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தியாவை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றதால் இன்றைய போட்டியில் முழு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் 16 ஆண்டுகளுக்கு பின்பு இன்றுதான் மோதுகிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வென்றது. அதன் பிறகு நடைபெற்ற 2007, 2011,2015 உலகக் கோப்பை போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படவில்லை.
உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 4 முறையும் இந்தியா 3 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. எந்தெந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வென்றது என்பதை பார்க்கலாம்.
ஆண்டு அணி
1975 - நியூசிலாந்து
1979 - நியூசிலாந்து
1987 - இந்தியா
1987 - இந்தியா
1992 - நியூசிலாந்து
1999 - நியூசிலாந்து
2003 - இந்தியா