டி20-யில் தோனியின் சாதனையை முந்தும் கோலி - இன்னும் 25 ரன்களே தேவை..!

டி20-யில் தோனியின் சாதனையை முந்தும் கோலி - இன்னும் 25 ரன்களே தேவை..!

டி20-யில் தோனியின் சாதனையை முந்தும் கோலி - இன்னும் 25 ரன்களே தேவை..!
Published on

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை முந்துவதற்கு தற்போதைய கேப்டன் கோலிக்கு 25 ரன்களே தேவைப்படுகிறது.

இந்திய அணி மட்டுமல்ல உலக அளவில் கிரிக்கெட்டின் சாதனை மன்னன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். ஆனாலும் கேப்டன் என்ற முறையில் இந்தியாவில் சாதனைகளை வாரிக்குவித்தது மகேந்திர சிங் தோனி தான். அவரது சாதனைகளை தற்போது ஒவ்வொன்றாக விராட் கோலி முறியடித்து வருகிறார். குறுகிய காலத்தில் இந்திய அணிக்கு அதிகப்படியான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள கோலி, தனது தலைமையிலான அணியுடன் தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது முதற்கட்டமாக 5 டி20 போட்டிகளில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி மோதுகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. இதில் மூன்றாவது போட்டி நாளை ஹாமில்டானில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்து, டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி படைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து தோனி 1112 ரன்களை குவித்துள்ளார். கோலி தற்போது கேப்டனாக 1088 ரன்களை எடுத்திருக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிரான அடுத்த மூன்று போட்டிகளில் அவர் 25 ரன்கள் எடுத்து தோனியை மிஞ்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற வகையில், முதல் இடத்தில் 1273 ரன்களுடன் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளஸிஸும், இரண்டாம் இடத்தில் 1148 ரன்களுடன் நியூஸிலாந்து வீரர் வில்லியம்சனும் உள்ளனர்.

இவர்களின் சாதனையையும் இந்தத் தொடரில் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது நியூஸிலாந்து அணியின் கேப்டனாக வில்லியம்சனும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com