நியூசிலாந்து எதிரான அரை இறுதி போட்டியில் களம் இறங்கியதன் மூலம் இந்திய அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான கப்டில் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். அதாவது இந்தப் போட்டி தோனிக்கு 350 ஆவது ஒருநாள் போட்டியாகும். இதன் மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற 10 வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு 350 ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
அத்துடன் இந்த 350 ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையையும் தோனி படைத்துள்ளார். இவருக்கு முன் இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககாரா 360 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் அவர் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.
இவற்றுடன் தான் பங்கேற்றுள்ள 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டியில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

