‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..!

‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..!

‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..!
Published on

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டியில் மழையின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க வானிலை மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழையின் குறுக்கீடு இருக்கும் என கணிப்புகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் போட்டி மழையின் குறுக்கீடு இல்லாமல் நன்றாக சென்றுகொண்டிருந்தது. 

அபாரமாக பந்துவீசிய இந்திய அணி 46 ஓவர்களில் 209 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. களத்தில் ராஸ் டைலர் 67 (85) ரன்களுடனும், டாம் லதாம் 3 (4) ரன்களுடனும் இருந்தனர். அப்போது மழையும் களத்தில் இருந்தது. 47வது ஓவரின் முதல் பந்தை புவனேஷ்வர் குமார் வீசிய போது, மழை பொழிவு அதிகரித்தது. அந்தப் பந்தில் இரண்டு ரன்கள் அடிக்கப்பட்டதும், 211 ரன்களுக்கு நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மழை நின்றபாடில்லை. மழை நின்றால் டக்வொர்த் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படலாம் எனப்பட்டது. ஆனால் இறுதி வரையிலும் விக்கெட்டை இழக்கமால் நிலைத்து விளையாடிய மழை சதம் அடித்தது. இதனால் போட்டி ‘ரிசர்வ் டே’  (கூடுதல் நாள்) முறையில் இன்று மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி நின்ற இடத்திலிருந்தே இன்று தொடங்கும். இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்காது என்று கூறப்படுகிறது. 

இருந்தாலும், மழையின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ‘அக்குவெதர்’ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மதியம் ஒரு மணி வரை அவ்வப்போது மழை பொழிவு இருக்கக்கூடும் எனப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தின் ஈரப்பதம் அதிகம் இருக்கலாம் என்றும், அந்த தாக்கம் போட்டியில் எதிரொலிக்கலாம் எனவும் தெரிகிறது. ஆனாலும் போட்டி நேரத்தில் மழை இருக்காது என்றும், இரவுக்கு மேல் மழை பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com