இந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி ?

இந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி ?

இந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி ?
Published on

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி பிரிட்டனில் லண்டனில் தொடங்கிய உலகக் கோப்பை தொடர் அரை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் மூன்று அணிகள் அரையிறுதிக்குள் நுழையும் என ஏற்கெனவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுள் பெரும் போட்டி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு தோல்விகளால் உடைத்தெறிந்தது தென் ஆப்பரிக்கா. இதனால் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேசமயம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கணக்காக பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.

ஒருவழியாக லீக் போட்டிகளும் முடிவடைந்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றுள்ளன. 4 போட்டிகளிலுமே முதல் பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் முதல் பேட்டிங் செய்யும் அணிகள் பெரும்பாலும் 300 ரன்களை கடந்தே இலக்கை நிர்ணயித்தன. இந்த நான்கு போட்டிகளில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து தலா ஒரு போட்டியை வேறு அணிகளுடன் எதிர்கொண்டன. 

அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டியில் முதல் பேட்டிங் செய்து 336 ரன்கள் குவித்தது. எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் 212 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 291 ரன்கள் குவித்தது. இலக்கை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இந்நிலையில் தான் இன்று நியூஸிலாந்தும் இந்தியாவும் மோதிக்கொள்கின்றன. நடந்து போட்டிகளை வைத்து பார்க்கும்போது, எந்த அணி டாஸ் வென்றாலும் முதல் பேட்டிங்கை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்யும் பட்சத்தில் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து அதிரடியை எதிர்பார்க்கலாம். இவர்கள் அனைவரும் ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நிலைத்து ஆடக்கூடியவர்கள். அதேபோன்று நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சு கடினமானதாக இருக்கும். நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் கேப்டன் வில்லியம்சன் பெரும் சவாலாக இருப்பார். இருப்பினும் அந்த அணியில் தொடக்க வீரர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை. எனவே ஹென்றி நிக்கோல்ஸ் அல்லது கோலின் முன்ரோ இதில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணியில் புவனேஷ்குமார் இருப்பதால், முகமத் ஷமி சேர்க்கப்படுவரா எனக் கேள்வி உள்ளது. அப்படி சேர்க்கப்பட்டால், குல்தீப் யாதவ் அல்லது சாஹல் யாரேனும் ஒருவருக்கு நெருக்கடி. அவர்களும் சேர்க்கப்பட்டால் ரவீந்திர ஜடேஜா இடம் பெறமாட்டார். 

உலகக் கோப்பை வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது இந்தியாவும் நியூஸிலாந்தும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை நியூஸிலாந்து அணியும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை போன்றே இன்றைய போட்டியிலும் மழை குறுக்கீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி குறுக்கீடு செய்தால், போட்டியின் நிலையை பொறுத்து வெற்றி, தோல்வி அறிவிக்கப்படும். அப்படியும் மழை குறுக்கீட்டால் மறுநாள் போட்டி நடைபெறும். எனவே மழை குறுக்கிடக் கூடாது என்பதே ஒட்டுமொத்த ரசிகர்கள் ஒரே எண்ணமாக இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com