'ஹிட்மேன் ரிட்டர்ன்ஸ்' இந்தியாவுக்கு வெற்றி சாத்தியமாகுமா? இன்று இங்கிலாந்துடன் முதல் டி20
வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு ஒத்திகையாகவே இந்த தொடர் இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
முதல் டி20 போட்டியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த இயான் மோர்கன் ஓய்வுக்கு பிறகு, ஜோஸ் பட்லர் தலைமையில் முதல் முறையாக இங்கிலாந்து களம் காண்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் 11 பேர் பட்டியலை பார்ப்போம். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். விராட் கோலி இந்த போட்டியில் ஆடாததால் சஞ்சு சாம்சன் 3ம் வரிசையில் இறங்குவார். 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடுவார். ஸ்பின் ஆல்ரவுண்டராக தீபக் ஹுடாவும், சுழலுக்கு யுஸ்வேந்திர சாஹலும் ஆடுவர். புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவார்கள். இவர்களுடன் 3வது வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கான் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு ஒத்திகையாகவே இந்த தொடர் இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாமே: `என்னது... பதற்றமா? அதுவும் எனக்கா?’- தோனியின் கூல் கேப்டன்ஷிப் மொமன்ட்ஸ்! #HBDDhoni