இது விராட் - ரகானே கிளாசிக் ஆட்டம் - வெற்றி நோக்கி இந்தியா !
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இங்கிலாந்து, 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட்லர் 69, ஜோ ரூட் 48, கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்கள் சாய்த்தார்.
245 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை இன்று விளையாடி வருகிறது. ரன் கணக்கையே துவங்காமல் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, புஜாரா 5, தவான் 17 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால், 100 ரன்களை எட்டுமா என்றே நினைக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
இந்த இக்கட்டான நேரத்தில் தான் கேப்டன் விராட் கோலி, ரகானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். ஒரு புறம் விக்கெட்கள் விழாமலும், மறுபுறம் ரன்களை சேர்த்தும் ஒரு கிளாசிக் ஆட்டம் ஆடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல உயர்ந்தது.
42.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 114 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கும் விராட் - ரகானே ஜோடி 100 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. அப்போது கேப்டன் விராட் கோலி 58 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது இந்திய இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை எட்டிவிட்ட நிலையில், முக்கியமான இடத்தில் விராட் ஆட்டமிழந்துவிட்டார்.