இவ்வளவு பொறுமையாகவா விளையாடுவீர்கள் - ரசிகர்களை சோதித்த இங்கிலாந்து
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் ஹனுமா விஹாரி, அஸ்வினுக்கு பதில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் அலெஸ்டர் குக், ஜென்னிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. 23 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, குக், முகமது அலி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இது பார்ப்பவர்களை பொறுமை இழக்கச் செய்யும் வகையில் இருந்தது. சிறப்பாக விளையாடி வந்த குக் 71 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆகி அவுட் ஆனார். இது அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியாகும். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
குக் அவுட் ஆன அதே ஓவரில் கேப்டன் ரூட் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். ரூட் டக்-அவுட் ஆன வேகத்தில் பேர்ஸ்டோவ் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 மூன்று விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, முகமது அலி, ஸ்டோக்ஸ் ஜோடி சற்று நேரம் நிலைத்து நின்றது. ஆனால், ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவரை தொடர்ந்து கர்ரன் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். பின்னர், சிறப்பாக விளையாடி வந்த முகமது அலியும் 50 ரன்னில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 170 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார்.
இங்கிலாந்து அணி முதல் நாளில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ரன் ரேட் 2.23 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 250 ரன்களுக்கு மேல் முதல் நாளில் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னர் அடுத்தடுத்து விக்கெட் விழவே அந்த அணி ஆட்டமிழக்கும் நிலைக்கு வந்துள்ளது. முதல் நாளில் 90 ஓவர்களை முழுமையாக விளையாடி இங்கிலாந்து 198 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. குக், முகமது அலி இருவரும் அவ்வளவு பொறுமையாக விளையாடினர். இருவரும் சேர்ந்து 360 பந்துகளை சந்தித்தனர். அதாவது 60 ஓவர்களை இவர்களே விளையாடினர். ஆனால், இருவரும் சேர்ந்து வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இங்கிலாந்து வீரர்களின் பொறுமையான இந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் ரசிகர்களையே சோதித்துவிட்டது