“விக்கெட் சரிந்தால் என்ன?” அதிரடியாக சதம் விளாசிய கே.எல்.ராகுல்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களும், இந்திய அணி 272 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.
இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும், புஜாரா, விராத் கோலி டக் அவுட் ஆகியும் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். கே.எல்.ராகுலும் ரஹானேவும் ஆடினர். நான்காம் நாளான நேற்றையை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 41, ரகானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாளான இன்று கே.எல்.ராகுலும், ரகானேவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் 87 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 32.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இந்திய அணி 120 ரன் எடுத்திருந்த நிலையில் நிதானமாக விளையாடிய ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் நேர்த்தது. ரகானே ஆட்டமிழந்த உடனே விஹாரி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கடந்தப் போட்டியில் அரைசதம் அடித்த விஹாரி இந்தப் போட்டியில் ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டே சென்றாலும், மறு முனையில் அதிரடி குறையாமல் கே.எல்.ராகுல் ரன்களை குவித்தார். 118 பந்துகளில் அதிரடி சதத்தினை அவர் பதிவு செய்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 45 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ராகுல் 108, பாண்ட் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தோற்கும் என்பது கிட்டதட்ட உறுதியான நிலையில் ஒரு ஆறுதலான வெற்றியாவது கிடைக்குமா என்ற ஏக்கம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், கேப்டன் விராட் கோலி உட்பட தவான், புஜாரா, பிஹாரி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால், கே.எல்.ராகுல் அதிடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
உணவு இடைவேளைக்கு பிறகு கே.எல்.ராகுல், பாண்ட் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 53 ஓவரில் 200 ரன்களை கடந்தது. ராகுல் 124, பாண்ட் 33 ரன்கள் எடுத்தனர்.