இன்று 3-வது டெஸ்ட்: ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு

இன்று 3-வது டெஸ்ட்: ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு
இன்று 3-வது டெஸ்ட்: ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரில் 0–2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.

 ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் அணியான இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போராட்டமே இல்லாமல் சரணடைந்ததால், அணி மீது கடுமை யான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ’இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு வீரர்கள் தேர்வில் செய்த தவறுதான் காரணம்’ என்று இந்திய கேப்ட ன் விராத் கோலி வெளிப்படையாகக் கூறியிருந்தார். 

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத மைதானத்தில், இரண்டாவது சுழல் பந்துவீச்சாளரை சேர்த்திருக்கக் கூடாது என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து இன்றைய போட்டியில் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா களமிறங்குகிறார். காயத்தில் இருந்து குணமாகியுள்ள பும்ராவின் வருகை இந்திய அணிக்கு நம்பிக்கையை அளிக்கும். முதுகுவலியால் அவதிப்பட்ட கேப்டன் விராத் கோலியும் மீண்டு விட்டார். அதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் 0, 20, 1, 0 என ரன் எடுத்துள்ள அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அறிமுக வீரராகச் சேர்க்கப்படுகிறார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோர் கடந்த போட்டியை விட சிறப்பாக செயல்பட வேண்டும். 

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், கே.எல்.ராகுல், தவான் ஆகியோர், இங்கிலாந்து வீரர்களின் ஸ்விங் பந்துவிச்சுக்கு விரைவில் இரையாகிவிடுகிறார்கள். ஸ்விங் பந்தை கணிப்பது கடினம் தான் என்றாலும் பொறுமையாகவும், கவனத்துடனும் அவர்கள் செயல் பட்டால் பின் வரிசை வீரர்கள் நம்பிக்கையுடன் ஆட முடியும். இன்றைய போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டால், முரளி விஜய் அல்லது ராகுலுக்கு வாய்ப்பு இருக்காது.

இங்கிலாந்தின் வேகங்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இன்றைய போட்டியிலும் மிரட்ட தயாராகி யுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் களமிறங்கிய வோக்ஸ் சதமடித்து ரன்கள் குவித்ததால் இந்த போட்டியிலும் இடம்பிடித்துள்ளார். சாம் குர்ரன், ஸ்டோக்ஸூக்காக நீக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி, முதல் இரு டெஸ்டுகளில் கிடைத்த வெற்றியால்  உற்சாகத்துடன் இருக்கிறது. இந்த போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் அதற்காக கடுமையாக அந்த அணி போராடும். 

போட்டி நடக்கும் நாட்டிங்காம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், இரண்டு தோல்வியும், மூன்று போட்டியை டிராவும் செய்துள்ளது. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com