
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், 3ஆவது டி20 போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 39 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். லியாம் லிவிங்ஸ்டன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த், விராட் கோலி, கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் சூர்யகுமாரும், ஸ்ரேயாஸ் அய்யரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேகரித்தனர். ஸ்ரேயாஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சூர்யாகுமார் சதம் விளாசி அசத்தினார். அவர் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 14 பவுண்டரிகள் உதவியுடன் 117 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.