முரளி விஜய், ராகுல் மீண்டும் சொதப்பல் ! லார்ட்ஸில் சதம் அடித்தார் ஆண்டர்சன்
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் லாட்ஸ் மைதானத்தில் நூறு விக்கெட்டுகளை சாய்த்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதலில் தடுமாறினாலும் வோக்ஸ், பெர்ஸ்டோவ் அபார ஆட்டத்தால் 396 ரன்கள் குவித்தது. வோக்ஸ் 137 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முரளி விஜய் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு லாட்ஸ் மைதானத்தில் மட்டும் இது 100வது டெஸ்ட் விக்கெட் ஆகும். லாட்ஸ் மைதானத்தில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்களை எடுத்துள்ளார்.
முரளி விஜயை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 10 ரன் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 17 ரன்னிற்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.
ஆண்டர்சன் 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 550 விக்கெட்களை சாய்த்துள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில்
269 விக்கெட் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் மட்டும் விளையாடி 18 விக்கெட்களை எடுத்துள்ளார்.