சைனாமேன் வந்தாலே விக்கெட் மழைதான் - குல்தீப் சுழலில் இங். ஓபனர்கள் காலி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தார்.
லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராய், பெர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த அணி 8 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் குவித்தது. இதனால், 9வது ஓவரிலேயே ஸ்பின்னரை களமிறக்கினார் கேப்டன் விராட் கோலி. 9 வது ஓவரை சாஹல் வீச அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 10வது ஓவரை கவுல் வீச அந்த ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 69 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 11வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இரண்டாவது பந்திலே பெர்ஸ்டோவ்(38) போல்டாகி ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, குல்தீப் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தில் சிறப்பாக விளையாடிய ராய் 42 ரன்களில் கேட்சாகி அவுட் ஆனார்.
சிறிது நேரம் குல்தீப்க்கு ஓய்வு அளித்த கோலி, சாஹல், ரெய்னா, பாண்ட்யாவை பந்து வீச வைத்தார். ஆனால், விக்கெட் விழவில்லை. பின்னர், 31வது ஓவரை வீச அழைக்கப்பட்டார் குல்தீப். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மோர்கனை அவுட் ஆக்கினார். மோர்கன் 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து விளையாடி வருகிறது.
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்தப் போட்டியைப் போல் தான் அந்தப் போட்டியிலும் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அவர்களை குல்தீல் வந்த வேகத்தில் அவுட்டாக்கினார்.

