பங்களாதேஷூக்கு எதிராக போட்டியில் இந்தியா பெற்ற த்ரில் வெற்றிகள்
இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இடையேயான சில போட்டிகளை ரசிகர்களால் எளிதில் மறந்து விட முடியாது. அவ்வகையில் பங்களாதேஷூக்கு எதிராக இந்திய அணி பெற்ற சில த்ரில் வெற்றிகளை தற்போது பார்க்கலாம்.
2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணி கொடுத்த அதிர்ச்சி இன்று வரை கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் மறையாமல் உள்ளது. அப்போது சுதாரித்துக் கொண்ட இந்திய அணி இன்று வரை உலகக்கோப்பை போட்டிகளில் பங்களாதேஷிடம் தோற்றதில்லை. இருப்பினும் பங்களாதேஷ் அணியும் பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய சவால்களை அளித்துள்ளது.அவற்றில் சில போட்டிகளை ரசிகர்களால் எளிதில் மறந்து விட முடியாது.
2014 ஆம் ஆண்டு தாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில், தோனி, கோலி, ரோகித் இல்லாமல் ரெய்னா தலைமையில் இறங்கிய இந்திய அணியை 105 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தது பங்களாதேஷ் அணி. எளிதான இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி ஸ்டூவர்ட் பின்னியின் ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. அப்போட்டியில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில்147 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டை எட்டிவிட்டது என்றே கூறலாம். வெற்றி பெறும் முன்னரே கொண்டாடிய அவர்களுக்கு, கடைசி பந்து வரை இழுத்துச் சென்று தோல்வியை பரிசளித்து வழியனுப்பியது இந்தியா.
2018 ஆம் ஆண்டு நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டி பங்களாதேஷ் அணியுடன் செய்த மற்றொரு போர் என்றே கூறலாம். இலங்கையில் நடைபெற்ற அப்போட்டியில் பாம்பு நடனம் என்ற பெயரில் பங்களாதேஷ் அணி செய்த அலப்பறைகளால் மைதானம் பட்டப்பாடு அனைவரும் அறிந்ததே. அப்போட்டியில் இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம். கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் அரங்கையே அதிர வைத்தது. இதேபோல இன்றைய போட்டியியும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.