ராஞ்சி மைதானத்தில் விளையாடியது மழை: ஆஸ்திரேலியா 118/8
ராஞ்சியில் நடைபெற்று வரும் முதலாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் விளையாடி ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த வார்னர் அதே ஓவர்களில் போல்டாகி வெளியேறினார். பின்னர், பிஞ்சு உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் நிதானமாக விளையாட, பிஞ்ச் சற்று அதிரடி காட்டினார். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் சாகல் பந்துவீச்சில் அவுட்டாகினார். அவரை தொடர்ந்து பிஞ்சும் 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 9.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
19-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. நீண்ட நேரம் மழை விட்டு விட்டு பெய்ததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.