தோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முன்றாவது ஒருநாள் போட்டியில் தோனியின் அசத்தலான செயலால் மேக்ஸ்வேல் ரன் அவுட் ஆகியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்று உஸ்மான் காவாஜா ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 193 ரன்கள் சேர்த்தனர். ஃபின்ச் 93(99) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வேல் அதிரடியாக மிரட்டினார். இவர் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார். 41வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மார்ஸ் பந்தை ஜடேஜாவை நோக்கி அடித்தார். அதை இலகுவாக பிடித்த ஜடேஜா விக்கெட் கீப்பர் தோனியிடம் ஏறிந்தார். அந்தப் பந்தை அசத்தலாக தோனி தனது ஒரு கையால் ஸ்டெம்பை நோக்கி திருப்பி விட்டு, மேக்ஸ்வேலை ரன் அவுட் ஆக்கினார். தோனியின் இந்தச் செயலை மைதானத்திலிருந்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும், ஆரவாரத்துடனும் ரசித்தனர். மேலும் இதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.