ரோகித், தவான் அரைசதம் - 400 ரன்கள் குவிக்குமா இந்திய அணி?
மொகாலியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில், மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்திரா மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
மொகாலி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. ஒரு சிறந்த அணி இந்த மைதானத்தில் எளிதில் 350 ரன்கள் எட்ட முடியும். 2017ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 392 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன் ஆகும். ரோகித் சர்மா இந்த மைதானத்தில் தான் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக சச்சின் மொத்தம் 366 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் விராட் கோலியும் கடைசியா 154 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து இருந்தார்.
தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளம் அமைத்தால்தான் ஒரு அணி 350 ரன்களை எட்ட முடியும். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி தொடர்ச்சியாக சொதப்பி வந்தது. ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து இருவரும் ஏமாற்றி வந்தனர்.
இந்நிலையில், இன்றையப் போட்டியில் தவான், ரோகித் ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஷிகர் தவான் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 17.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது.
நிதானமாக விளையாடிய ரோகித் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 40வது அரைசதம் ஆகும். இந்திய அணி 22 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 130 ரன்களை எட்டியுள்ளது. ரோகித் - தவான் ஜோடி 15வது முறையாக 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இது மூன்றாவது சிறப்பான ஜோடி ஆகும். இந்திய அணி 30 ஓவரில் 182 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 92 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 31 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. இருப்பினும், தவான் 97 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
இதனையடுத்து, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர் என 5 பேட்ஸ்மேன்கள் வரிசையாக உள்ளனர். அதனால், இந்திய அணி நிச்சயம் 350 ரன்கள் எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பாக விளையாடினால் 400 ரன்கள் குவிக்கவும் வாய்ப்புள்ளது.