‘ரன்கள் குவிக்க சிரமமாக இருந்தது’ - தோனிக்கு ஆதரவாக மேக்ஸ்வெல் கருத்து
விசாகப்பட்டினம் மைதானத்தில் ரன்கள் குவிக்க சிரமமாகதான் இருந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிலென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் அரைசதம் அடிக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தோனி மிகவும் நிதானமாக விளையாடியதால் தான் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கடைசி ஓவரில்கூட தோனி, 5 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் கடைசி ஓவரின் கடைசி பந்தில்தான் வெற்றி இலக்கை எட்டியது. மிடில் மற்றும் கடைசி ஓவர்களில் ரன்கள் அடிக்க இரு அணிகளும் சிரமப்பட்டன. முதல் 10 ஓவர்களில் இரு அணிகளும் வலுவாக இருந்து, கடைசி 10 ஓவர்களில் சரிவை சந்தித்தன.
இருப்பினும், கேப்டன் விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் போட்டிக்குப் பின்னர் பேசுகையில் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று மறைமுகமாக சாடினர். சமூக வலைத்தளங்களிலும் தோனியின் பேட்டிங் குறித்து நேற்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நிறைய சிங்கிள்களை தோனி எடுக்காமல் இருந்ததையும் பலர் குறிப்பிட்டு இருந்தனர்.
தோனி ஏற்கனவே கடந்த ஆண்டு பலமுறை இதேபோல் நிதானமாக ஆடியதற்கான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் அவரது பேட்டிங் விமர்சனங்களுக்கு உள்ளானது. இத்தகைய நிலையில் மீண்டும் அதே சோதனைக்குள் சிக்கியுள்ளார் தோனி. வழக்கம் போல் தோனி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தோனிக்கு ஆதாரவாக ஆஸ்திரேலிய அணியிலிருந்தே ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த அணியில் அரைசதம் அடித்த கிலென் மேக்ஸ்வெல் கூறுகையில், ‘விக்கெட் வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சீரான ஸ்டிரைக் ரேட் என்பது இந்த மைதானத்தில் போதுமானது. ஒரு பக்கம் விக்கெட் சரியும் போது, எந்த பேட்ஸ்மேனுக்கு அடித்து விளையாடுவது சிரமம்தான். தோனி ஒரு உலக தரம் வாய்ந்த பினிஷர்தான். சரியான ஷாட் அடிப்பதற்கு மிகவும் முயற்சித்தார். அவர் இடத்தில் இருந்து முயற்சித்தது சரியே. கடைசி ஓவரில்தான் அவர் ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த அளவில் அடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது’ என்றார்.