பாய்ந்து பதுங்கிய இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு 127 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா 5 (8) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் மற்றொரு வீரரான ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் கோலி 24 (17) ரன்களின் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த ரிஷாப் பண்ட் 3 (5) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அடுத்ததாக தோனி வந்தார்.
இதன்பின்னர், அரைசம் சதம் எடுத்த நிலையில் ராகுல் தனது விக்கெட்டை இழக்க, இந்தியா நெருக்கடிக்குள்ளானது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இறுதி வரை விளையாடிய தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை சூடாக்கினார். இறுதிவரை அவர் பவுண்டரிகள் விளாசாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் நாதன் கட்லர் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.