2வது டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் போட்டியாக இது அமைந்துள்ளது. போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது தங்களுக்கும் திருப்தி தான் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
“நாங்கள் தங்கியுள்ள பயோ பபுளில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதே போலா பார்வையாளர்கள் விவகாரத்திலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார் ஆண்டர்சன்.
“பவுண்டரி லைனை கடந்து ஸ்டேண்டுக்குள் விழும் பந்துகளை எடுத்து கொடுக்க தன்னார்வலர்கள் முதல் போட்டியின் போதே அனைத்து ஸ்டேண்டிலும் இருந்தனர். அதே போல பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ள இரண்டாவது போட்டியிலும் தன்னார்வலர்கள் இருப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் பந்தில் சானிடைசர் அப்ளை செய்யப்படுகிறது. அதே போல அந்த பந்தை தொடும் முதல் வீரரின் கைகளிலும் சானிடைசர் கொடுக்கப்படுகிறது. அது தொடரும்.
50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஒரு நாற்காலி தள்ளி அமர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் உறுதி செய்யப்படும். மருத்துவ உதவிகளும் கொடுப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பார்கள். முகக்கவசம் அணிவது அவசியம். 17 நுழைவிலும் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பார்வையாளர்களில் யாரேனும் இரும்பினாலோ அல்லது தும்மினாலோ சம்மந்தப்பட்டவரை தனிமைப்படுத்தப்பட்டு, மைதானத்திலிருந்து வெளியேற வேண்டி இருக்கும்” என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.